தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகை பறிப்பு… நீதிபதி வீட்டின் அருகே மர்மநபர்கள் கைவரிசை…!!
Author: Babu Lakshmanan9 July 2022, 4:58 pm
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 10 சவரன் நகை பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் தசரத நகரில் நீதிபதி, மேஜிஸ்திரேட் என முக்கிய அரசு அலுவலர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களது வீடுகளின் அருகே லாரி மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்றிரவு வீட்டை உள்பக்கம் தாழிட்டு குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தார்.
அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி சரடு மற்றும் தங்க சங்கிலியை பறித்து கொண்டு வெளியே காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பியோட்டம் பிடித்தார்.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிபதி, மேஜிஸ்திரேட் வீடுகளின் அருகே நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.