சாலையோர கடைகளை அடித்து தூக்கிய கார்.. மதுபோதையில் தாறுமாறாக வந்த ஓட்டுநர் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2022, 9:52 pm
கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் மது போதையில் கன்னியாகுமாரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சாலை ஓரத்தில் இருந்த சிறு வியாபாரிகள் , சுற்றுலா பயணிகள் மற்றும் கடைகள் மீது வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
மேலும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கூடும் முக்கிய பகுதியாக நட்சத்திர ஏரி இருந்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் அதிவேகமாக மது போதையில் ஏரி சாலைக்குள் சென்றுள்ளார் .
அப்போது நிலை தடுமாறி வாகனம் சுற்றுலாப் பயணிகளின் நடை பாதை அருகே உள்ள வியாபாரிகள், கடைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
மது போதையில் இருந்த சுரேஷ் என்பவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பிடித்து கொடைக்கானல் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.