அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைப்பு… தரையில் அமர்ந்து ஓபிஎஸ் தர்ணா… வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீசார்…!!
Author: Babu Lakshmanan11 July 2022, 1:12 pm
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் வெளியேற்றினர்.
நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கண்டித்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மாறாக, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தி வந்தார். அங்கு இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் திரண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது, எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இதனால், அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் ராயப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சூறையாடினர். மேலும், இருதரப்பினரும் மாறிமாறி அடித்துக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அதிமுகவில் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்து தங்களின் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டார்.
இதனிடையே, ராயப்பேட்டையில் வன்முறை சம்பவங்களால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைக்க முற்பட்டனர். அப்போது, அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். ஆனால், இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், ஓபிஎஸ் தலைமையில் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர்.
பின்னர், போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டமாக திரண்டிருப்பதும் சட்டவிரோதம் என்று சொல்லி, அவர்களை வெளியேற்றினர். ஓபிஎஸ் தான் வந்த வாகனத்தில் ஏறி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.