திருநங்கையிடம் சாலையோரத்தில் உல்லாசம்… ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை.. 5 திருநங்கைகள் கைது… ஒருவர் தலைமறைவு
Author: Babu Lakshmanan12 July 2022, 12:39 pm
கோவை துடியலூர் அருகே பாலியல் இச்சைக்காக வந்த ஹோட்டல் ஊழியரை அடித்தே கொன்ற திருநங்கைகள் 5 பேரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலைகளில் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாகச் செல்வோரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதைத் தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி சாலை ஓரங்களில் நின்று பாலியல் தொழிலுக்கு ஆண்களை அழைக்கக் கூடாது என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இருந்தபோதும் திருநங்கைகள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மாலை 6 மணியில் இருந்து இரவு 2 – 3 மணி வரை பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 8ம் தேதி இரவு துடியலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வர்களாக வேலை செய்து வரும் பொன்னமராவதியைச் சேர்ந்த 49 வயதான தர்மலிங்கம் மற்றும் பிரவீன் ஆகியோர் ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் இச்சைகாக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்தாக தெரிகிறது. இதில் திருநங்கை ரேஸ்மிகா கத்தி கூச்சல் போட்டுள்ளார்.
இதைப் பார்த்து அருகில் இருந்த அவரது நண்பர்களான திருநங்கைகள் மம்தா, கவுதமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து தர்மலிங்கம் மற்றும் பிரவீன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரவீன் அங்கிருந்து ஓடிவிட தர்மலிங்கத்தை ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த தர்மலிங்கம் வெளியில் சொன்னால் அவமானம் எனக் கருதி கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விழுந்து விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.இது குறித்து மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்திய நிலையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து போலீசார் தீர விசாரித்துள்ளனர்.
இதில் நடந்த சம்பவங்களை போலீசாரிடம் தர்மலிங்கம் கூறியுள்ளார். இதையடுத்து, அடிதடி வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் இறந்ததால் வழக்கை கொலை வழக்காக மாற்றி அடித்தவர்களை தேடிவந்தனர்.
இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருக்கும் திருநங்கைகள் ரேஸ்மிகா, மம்தா, கவுதமி, ஹர்னிகா, ரூபி உள்ளிட்டோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கீர்த்தி என்ற திருநங்கையை தேடி வருகின்றனர்.