அரசு பஸ்களில் பார்சல்கள் அனுப்பும் திட்டம் : ஆக.,3ம் தேதி முதல் அமலுக்கு வரும் : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 July 2022, 9:25 am

சென்னை :அரசு பஸ்களில் பார்சல்களை அனுப்பும் திட்டம் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பஸ்களை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பஸ்சில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் 3-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களையும் இதன் மூலம் அனுப்பலாம்.

இதனை, சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!