புதிய நிர்வாகிகள் நியமனத்தால் கடுப்பான ஓபிஎஸ்… உடனே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய பரபரப்பு கடிதம்
Author: Babu Lakshmanan14 July 2022, 11:17 am
சென்னை ; அதிமுகவில் புதிய நியமனங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் துணை பொதுச்செயலாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாகவது :- அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன், காமராஜ், ப.தனபால், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தலைமை நிலைய செயலாளர் பதவியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமிக்கப்பட்டு உள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை துணை பொதுசெயலாளர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிவிப்புக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இன்று வரை அதிமுக கட்சியில் நான் ஒருங்கிணைப்பாளர் என்றும் மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, இந்த புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் ஆகையால் அதை ஏற்கக்கூடாது என்றும் அந்த கடிதம் வாயிலாக பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாகவே ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.