பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை : கோவை அரசு பொருட்காட்சி அரங்கில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 9:36 am

கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் துறை அரங்கில் பணியின் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. அரசு துறைகளில் சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர காவல் துறை சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு, அதில் மாநகர காவல் துறையில் உள்ள நவீன உபகரணங்கள் மற்றும் காவல்துறையினரின் சாதனைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அரங்கிற்கு காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று பிற்பகல் அங்கு பணியில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து என்ற காவலர் தனது துப்பாக்கியை கொண்டு தனக்குத்தானே சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் படுகாயம் அடைந்திருந்த காவலரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பொருட்காட்சி வளாகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே வேலையில் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்துள்ள காவலர் காளிமுத்துவிற்கு கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 754

    0

    0