நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் 11 பெண்களை திருமணம் செய்து நகை பணம் மோசடி : கல்யாண மன்னனை தேடும் போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan16 July 2022, 2:09 pm
நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணம் மோசடி செய்த கல்யாண மன்னனை கைது செய்ய பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த 11 பெண்கள் நிருபர்களிடம் கூறியதாவது, குண்டூரை சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் தெரிவித்து திருமணத்திற்கு பெண் தேவை என்று மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார்.
திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் எங்களிடமிருந்த நகை மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார். இதே போல் பல பொய்களை சொல்லி அவர் எங்கள் 11 பேரையும் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவர் மீது தெலுங்கானாவில் உள்ள கூகட்பள்ளி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் ஆகிய காவல் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் போலீசார் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பலரை திருமணம் செய்து சிவ சங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் அவன் இல்லை சினிமா பாணியில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் ஆகியவற்றை பறித்த சிவசங்கர் மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.