ஏப்ரலில் சொத்துவரி, இப்போ மின்கட்டணம்…!அடுத்தடுத்து ‘ஷாக்’ கொடுக்கும் திமுக அரசு!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2022, 2:22 pm
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்த பின்பு, கட்டண உயர்வு விஷயத்தில் திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
சொத்து வரியை உயர்த்திய திமுக அரசு!!
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் சொத்து வரியை 150 சதவீதம் அளவிற்கு உயர்த்தி அறிவித்தது. இது ஏழை எளிய நடுத்தர மக்களின் கடும் கண்டனத்துக்கும் உள்ளானது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்பாக, மே மாதம் முதல் வாரம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, இனி ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு இருக்கும் என்று கூறி மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டார்.
திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் பதவி ஏற்றபோது 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் மொத்த கடன் சுமை, தற்போது 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக கூறப்படுவதை தொடர்ந்து சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கலாம் என்று பேசப்பட்டது.
தமிழக போக்குவரத்து தனியார்மயமாக்க முயற்சி
இதையடுத்து, தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், மொத்தத்தில் 49 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாகவும் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
இதனை தவிர்க்கும் பொருட்டு சென்னையில் முதல் கட்டமாக 1000 தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்கலாம் என்று ஒரு தகவல் வெளியானது. இது அரசு பஸ்களை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசு பஸ்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் இருந்து திமுக அரசு பின்வாங்கியது.
தமிழக ஷாக் கொடுத்த திமுக
இந்த நிலையில்தான் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக மக்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளார். மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மின் கட்டண உயர்வு வருகிற செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி குறைந்த பட்சம் 12 சதவீதம் முதல் அதிகபட்சம் 58 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிய வருகிறது.
மத்திய அரசு மீது பழி?
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “தமிழகத்தில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதனால் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருந்தாலும், 100 யூனிட் மின் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
மின் கட்டணம் உயர்வு விபரம்
“ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு” என்ற திட்டம் அமல்படுத்தப்படும். தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக் கூடாது என மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனால் ஏற்கனவே கடும் கடன் சுமையில் உள்ள மின் வாரியம், மேலும் கடின நிலையை சந்திக்கும். ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு உத்தேச பட்டியல் அளிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலுக்குப் பிறகே கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்தார்.
இந்த மின் கட்டணம் எப்படி, எவ்வாறு உயர்த்தப்படவுள்ளது என்பது பற்றிய விவரம்:
- மாநிலத்தில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வவோருக்கு அதாவது 42.19 சதவீதம் பேருக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
- அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
- 2 மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதத்திற்கு 27 ரூபாய் 50 காசு உயர்த்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது. - 2 மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 72 ரூபாய் 50 காசு அதிகரிக்க பரிசீலனை.
- 2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 147 ரூபாய் 50 காசு உயர்த்த
திட்டமிடப்பட்டுள்ளது. - 2 மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 297 ரூபாய் 50 காசு உயர்த்தப்படலாம்.
- 2 மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 155 ரூபாய் அதிகரிக்க திட்டம்.
- 2 மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 275 ரூபாய் உயர்த்த பரிசீலனை
- 2 மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 395 ரூபாய் உயர்த்துவதற்கு திட்டம்.
- 2 மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 565 ரூபாய் கூடுதலாக வசூலிக்க பரிசீலனை.
- வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்.
- குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்கள் முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் நீடிக்கும்.
இந்த கட்டண உயர்வால் நிச்சயம் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்று சமூகநல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மக்கள் மீது சுமை மேல் சுமை
“ஏற்கனவே ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ள தமிழக மின் வாரியம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடி ரூபாய் நஷ்டத்தையும் கடந்த 11 ஆண்டுகளில் சந்தித்து இருக்கிறது என்கிறார்கள். அதனால் மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை என்று தமிழக அரசு கூறினாலும் கூட இந்த மின் கட்டண உயர்வு என்பது மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு துண்டு விழச் செய்யும்.
குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிப்போர் கடும் அவதியை சந்திப்பார்கள். ஏனென்றால் ஒரே வீட்டில் நான்கைந்து குடித்தனங்களை வைத்துள்ள வீட்டின் உரிமையாளர் சப்-மீட்டர் இணைப்பு மட்டுமே கொடுத்திருப்பார். அதனால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 400, 500 யூனிட்டுகளுக்கான கட்டணம் இரு மடங்கு ஆகும்போது, அதை அவர் செலுத்தமாட்டார். வாடகைக்கு குடியிருப்போர் மீதுதான் சுமத்துவார்.
இன்று கிராமப்பகுதிகளில் கூட மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின், டிவி, பிரிஜ் இல்லாத வீடுகள் மிக மிக குறைவு. பலருடைய வீடுகளில் ஏசி வசதியும் உள்ளது. அவர்களிடம் மின் பயன்பாடும் அதிகமாக இருக்கும். அதனால் அமைச்சர் என்னதான் புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு காட்டினாலும் அவர் கூறுவது போல 42 சதவீதம் பேருக்கு மின் கட்டண உயர்வால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது.
100 யூனிட் இலவச மின்சாரம் விட்டுகொடுக்கலாம்
100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுக்க விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என்ற கோரிக்கையையும் அமைச்சர் தமிழக மக்களுக்கு வைத்துள்ளார். இது எந்த அளவுக்கு அரசுக்கு கை கொடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. மின் கட்டணத்தை உயர்த்தாமல் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தால் அதற்கு ஓரளவு பலன் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், வழிபாட்டுத்தல விழாக்கள் போன்றவற்றின் போது, மின் திருட்டு அதிகம் நடைபெறுகிறது. இதை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகபட்ச அபராதம் விதித்தால் மின்வாரியத்திற்கு நல்ல வருவாயும் கிடைக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கும் முறையை, மாதம் ஒருமுறை என மாற்றுவோம் இதன்மூலம் தமிழக மக்களின் மின் கட்டண சுமை குறையும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. அதை எப்போது நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு கடுமையான அதிர்ச்சியளிக்கும் விதமாக மின் கட்டணத்தை கணிசமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதுக்கு இந்த வாக்குறுதி?
தமிழக மின்வாரியத்திற்கு எவ்வளவு கடன் இருக்கிறது நஷ்டம் ஏற்படுகிறது என்பது தெரியாமலா திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது? அதுவும் சொத்து வரியை உயர்த்தியபோது, மத்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் இதனைச் செய்யவேண்டிய கட்டாயம் நேர்ந்தது என்று திமுக அரசு கூறியது. உண்மையில் மத்திய அரசு 150 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று எங்குமே சொல்லவில்லை. சொத்து வரியை உயர்த்திக் கொள்ள மட்டுமே பரிந்துரை செய்திருந்தது.
இப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் முன்பு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு சொன்னதைப்போலவே மத்திய அரசுதான் காரணம் என்கிறார். இதுதொடர்பாக 28 முறை தமிழக அரசுக்கு கடிதம் வந்ததாகவும் கூறுகிறார். ஆனால் மத்திய அரசு ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று நிர்ணயம் செய்ததாக தெரியவில்லை.
அதாவது கட்டணத்தை உயர்த்தும் போதெல்லாம் மத்திய அரசுதான் காரணம் சொல்லி விடுகிறார்கள். அதேநேரம் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தும்போது அவற்றை தாங்கள் செய்வதாக கூறி திமுக தலைவர்கள் பெருமை பட்டுக் கொள்கின்றனர்.
வல்லுநர் குழு யோசனை?
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த ஓராண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. அதற்குள் சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு போன்றவை தமிழக மக்களை மேலும் இன்னலுக்குத்தான் உள்ளாக்கும்.
உலக அளவில் புகழ் பெற்ற 5 பொருளாதார வல்லுநர்கள் இப்படி கட்டண உயர்வை அதிகரிப்பதன் மூலம்தான் தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க முடியும் என்று யோசனை சொல்கிறார்களோ என்னவோ என்ற சந்தேகம் கூட இதனால் எழுகிறது” என்றும் அந்த சமூக நல ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.