மழையில் கவனம் தேவை… ஆம்புலன்ஸுக்கும்தான்… சாலையில் தூக்கி வீசப்பட்ட அவசர ஊர்தி…அதிர்ச்சி வீடியோ காட்சி..!!
Author: Babu Lakshmanan20 July 2022, 6:30 pm
கர்நாடகாவில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கர்நாடகா அணைகள் நிரம்பி, அதிகளவிலான உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழையின் காரணமாக ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால், ஆம்புலன்ஸ் சேவைகள் தொடர்ந்து தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில், உடுப்பி பகுதியில் நோயாளியை ஏற்றிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த டோல்கேட்டை கடக்க முயன்றது. ஆம்புலன்ஸின் சைரன் சத்தத்தை கேட்ட டோல் கேட் ஊழியர்கள் உடனடியாக தடுப்புகளை அகற்றி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது, டோல்கேட் அருகே வந்த ஆம்புலன்ஸ், சாலையின் ஈரப்பதத்தினால் வழுக்கி தூக்கி வீசப்பட்டது. இதனால், அந்த வாகனம் டோல் கேட்டின் அறையின் மீது வேகமாக தூக்கி அடிக்கப்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.