ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு ; உளவுத்துறை ஏடிஜிபி மீது புகார்.. கள்ளக்குறிச்சி வன்முறை குறித்தும் முறையீடு..!!
Author: Babu Lakshmanan21 July 2022, 12:57 pm
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியை திடீரென சந்தித்து பேசினார்.
ஆளும் திமுக அரசின் ஊழல் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடி காட்டி வருகின்றார். அதுமட்டுமில்லாமல், முன்கூட்டியே ஒரு துறையில் ஊழல் நடைபெறப் போவதையும் சுட்டிக்காட்டி திமுகவினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
அண்மை காலமாக, மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை கையில் எடுத்துள்ள அண்ணாமலை, தேசத்தின் பாதுகாப்பில் விளையாடுவதா..? என்று திமுக அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியுள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆ.என்.ரவியை சந்தித்தார். அப்போது, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அண்ணாமலை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளி மாணவி இறந்த விவகாரம், கள்ளக்குறிச்சி வன்முறை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் புகார் மீது ஆளுநர் ஆர்என் ரவி நடவடிக்கை எடுப்பாரா..? என்றும், ஒருவேளை எடுத்தால் அது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.