8 மாதமாகியும் மாற்று இடம் தரல… ரெண்டு ரூம்ல 45 பேர் தஞ்சம்… குளிக்க கூட இடமில்லாத சூழல்.. வாழ முடியாத நிலை என கண்ணீர்..!!

Author: Babu Lakshmanan
22 July 2022, 6:34 pm

காஞ்சிபுரம் கொட்டவாக்கம் ஊராட்சியில் சாலையை அகலப்படுத்துவதாக கூறி வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், 8 மாதங்களாகியும் மாற்று இடம் தராததால், வாழ முடியாத சூலில் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கொட்டவாக்கம் ஊராட்சியில் ரோட்டு தெரு பகுதியில் கால்வாய் ஓரம் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் 9 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். செல்வி, சங்கர், காசி, சிவசங்கரி, லஷ்மி ,உஷா, அம்மு, நாகவல்லி மற்றொரு உஷா என ஒன்பது குடும்பங்கள் ஊராட்சிக்கு உண்டான வீட்டு வரியை முறையாகக் கட்டி வருகின்றனர். அதேபோல் மின்சார அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல அரசு ஆவணங்களை வைத்துள்ளார்கள்.

கடந்த 8 மாதம் முன்பு பரந்தூர் டூ கம்மவார்பாளையம் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து கட்டவாக்கம் ரோட்டு சாலையில் வசித்து வந்த உஷா, அம்மு ,சிவசங்கரி உள்ளிட்ட 9 நபர்களின் வீடுகளை முன் அறிவிப்பு இல்லாமல் இடித்து தள்ளி விட்டனர்.

முன்னறிவிப்பு இன்றி கால்வாய் ஓரம் இருந்த வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து தள்ளியதால் அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு இடம் இன்றி அல்லல்பட்டனர். அப்பகுதி கிராம மக்களிடமும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் வீடு இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

வீடு இழந்த அனைவருக்கும் மாற்று இடம் அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இருந்த நிலையில் எட்டு மாதமாகியும், மாற்று இடம் அளிப்பதை பற்றி எந்தவிதமான தகவலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்காததால் சேவை மைய கட்டிடத்தில் தங்கி இருந்த அனைவரும் ஒன்று கூடி, இடிக்கப்பட்ட தங்கள் வீடுகளின் முன்பு மாவட்ட நிர்வாகத்தையும், நெடுஞ்சாலைத்துறையினரையும் கண்டித்து சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதைப் பற்றி கை குழந்தை வைத்துள்ள சிவசங்கரி என்ற பெண்மணி கூறும் போது, ஐந்து வருடம் முன்பு திருமணம் ஆகி நான் கொட்டிவாக்கம் கணவர் வீட்டுக்கு வந்தேன். 8 மாதம் முன்பு எங்கள் வீட்டை இடித்து தள்ளியதால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சேவை மைய கட்டிடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நான் தங்கி வருகின்றேன். இங்கு உள்ளவர்களை திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்கள், வீடு இடித்த காரணத்தினால் தங்கள் கணவரை விட்டுவிட்டு பிரிந்து சென்று விட்டனர் என கண்ணீர் மல்க, கூறினார்.

மேலும் சிவசங்கரி கூறுகையில், 45 நபர்களும் இரண்டு அறைகளில்தான் தங்கி உள்ளோம். பெண்கள் கழிவறை செல்வதற்கு கூட இடமின்றி தவித்து வருகின்றோம். இங்கு சமையல் செய்யவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ போதிய வசதிகள் இல்லாததால் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் மிகவும் சிரமப்படுகின்றேன். என்னை போலவே தான் மற்றவர்களும் மிகவும் சிரமத்துடன் இங்கே தங்கி உள்ளார்கள், என வேதனையுடன் கூறினார்.

திமுக அரசாங்கம் எங்களுக்கு எதையுமே செய்யவில்லை. மாற்று இடத்தையாவது உடனே வழங்க வேண்டும், என்றார். மேலும், மாற்று இடம் உடனே அளிக்காவிட்டால் நாங்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மண்ணெண்ணெய் ஊத்திக்கொண்டு தீக்குளிப்போம், என எச்சரித்தார்.

மத்திய மற்றும் மாநில அரசின் திட்டத்தின் மூலமாவது வீடு இழந்த அனைவருக்கும் ஊரக வளர்;rசித்துறை திட்ட இயக்குநர் மாற்று இடம் உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகின்றனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 707

    0

    0