குரூப் 4 தேர்வெழுத லேட்டாக வந்த தேர்வர்கள்.. அனுமதி மறுக்கப்பட்டதால் கேட்டுகளை உடைத்து வாக்குவாதம் : போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 11:57 am

விழுப்புரத்தில் டி என் பி எஸ் சி தேர்வு எழுத 5 நிமிடம் தாமதமாக வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் தனியார் தேர்வு மைய வளாகம் முன்பு தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வளாக கேட்டினை தள்ளி உடைக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் தட்டச்சர், கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.

குரூப் 4 ல் காலியாக 7301 பணியிடங்களுக்கான தேர்வினை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 207 தேர்வு மையங்களில் தேர்வானது இன்று நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 68,244 விண்ணபித்து தேர்வினை எழுதி வருவதால் இத்தேர்வினை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் 53 நடமாடும் குழுக்களும் 27 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குருப் 4 தேர்வினை எழுதும் மையத்தில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எலக்ட்ரானிக் பொருட்களை எதுவும் எடுத்து செல்ல கூடாதென அறிவுறுத்தி சோதனையிட்ட பின்னரே தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

தேர்வு எழுத வந்த தேர்வர்களை 9 மணி வரை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். தேர்வு முன்னிட்டு முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகளும், தேர்வு மையம் முன் பேருந்துகள் நின்று செல்லவும் அறிவுறுத்தப்பட்டன.

இந்நிலையில் விழுப்புரம் மாதாகோவில் அருகில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேர்வு எழுத வந்த 10 தேர்வர்கள் 9.05 க்கு தேர்வு மையத்திற்குள் வந்ததால் அவர்கள் அனுமதிக்கபடாததால் பெண் தேர்வர்கள் உட்பட்ட 10 பேர் தேர்வு மைய வாயிலில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து வளவனூரை சார்ந்த பிரியா என்ற பெண் தேர்வு மையத்தில் அனுமதிக்க கோரி திடீரென வாயில் கேட்டினை திறக்ககோரி ஆக்ரோஷமாக திறக்க கேட்டினை தள்ளி உடைக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் தேர்வு மைய வாயிலில் இருந்தவர்களை அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதே போன்று விழுப்புரத்திலுள்ள பல்வேறு மையங்களில் தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தாமதமாக வந்ததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!