அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு : பள்ளியில் குவிந்த பெற்றோர்கள்… போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது..!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 6:16 pm

விருதுநகர் : சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளை கணித ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்ததாக பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச் சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சூரங்குடி, நடுச் சூரங்குடி, ஸ்ரீரங்கபுரம் பத்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 270க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் 16க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக் கூறி பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள் காவல்துறையினர் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில், பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவித்தார்.

மேலும், பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், சாத்தூர் தாலுகா போலீசார் பள்ளி ஆசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஆசிரியரை கைது செய்து அழைத்து வரும்போது, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியரை தாக்க முற்பட்டனர். இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட போலீசார் பாதுகாப்புடன் ஆசிரியரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!