5000 மாணவர்கள் ஒரே இடத்தில் திருக்குறள் வாசித்து அசத்தல் ; கோவை புத்தக திருவிழாவில் நடந்த சுவாரஸ்யம்!!
Author: Babu Lakshmanan28 July 2022, 12:35 pm
கோவை : 5,000 மாணவர்கள் ஒரே இடத்தில் திரண்டு நின்று 20 திருக்குறளை வாசித்த நிகழ்வு கோவை புத்தக விழாவில் நடைபெற்றது.
கோவை கொடிசியா வளாகத்தில் 6 வது புத்தக கண்காடசி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய பதிப்பாளர்கள் இணைந்து இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர். 31ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று 5000 பள்ளி மாணவ, மாணவியர்கள் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் “திருக்குறள் திரள் வாசிப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 5000 பேர் கொடிசியா D ஹாலில், திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 10 அதிகாரங்களில் இருந்து 20 குறள்களை அனைத்து மாணவ மாணவிகளும் திரளாக வாசித்தனர். ஆசிரியர்கள் சொல்ல சொல்ல திருக்குறள் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் அக்குறளுக்கான விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தமிழறிஞர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ராஜாராம் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.