திமுகவுக்கு பயம் வந்துருச்சு…. இலவச கொரோனா தடுப்பூசிக்கு ஸ்டிக்கர் போட்ட திமுக… செஸ் ஒலிம்பியாட்டை சொந்தம் கொண்டாடுவதா..? பாஜக கேள்வி!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 8:33 pm

44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் பிரதமர், குடியரசு தலைவர் புகைப்படங்களை சேர்க்கக்கோரி சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது.

ஆனால் ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இதற்காக இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, ” 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

மேலும், இந்த செயலில் ஈடுபட்ட தமிழக அரசு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு, இன்றைய நாளிதழிளில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தலைமைநீதிபதி அமர்வு, “குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் பிரதமர் மோடியை சேர்க்காத தமிழக அரசுக்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பிரதமரின் படம் சதுரங்க ஒலிம்பியாட் விளம்பரங்களில் இடம் பெறாதது ஏன் என்ற கேள்விக்கு, இது மாநில அரசு நிதியில் நடைபெறுகிறது, அதனால் அவசியமில்லை என்கிறார்கள் திமுகவினர்.

இது முறையற்ற வாதம். அப்படியானால், தடுப்பூசிகள் முழுவதையும் மத்திய அரசே அளித்த நிலையில், தமிழகத்தில் அது குறித்த விளம்பரங்களில் முதலமைச்சர் படம் இடம் பெற்றது என்பதோடு, பிரதமரின் படம் இடம் பெறவில்லையே? அது தவறு என்று ஒப்பு கொள்வார்களா? தடுப்பூசி குறித்த விளம்பரங்களில் முதலமைச்சரின் படம் இடம்பெற்றது ஏன் என்று நாம் கேட்கவில்லை, பிரதமரின் படம் தவிர்க்கப்பட்டது ஏன் என்று தான் கேட்டோம். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பிரதமர் இருட்டடிப்பு செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது மலிவான அரசியலே.

சதுரங்க போட்டிகளை பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்காணித்து கொண்டிருப்பார்கள் என்பதால், உலகமே கொண்டாடும் நம் பிரதமரை அழைத்து துவக்குவது கௌரவம் என்று கருதி அழைக்கும் திமுக அரசு, அவருக்கு உரிய மரியாதையை அளிக்க தவறுவதை தான் நாம் சுட்டி காட்டுகிறோம். கூட்டாட்சி தத்துவம் என்று எப்போதும் துள்ளிக்குதிப்பவர்கள், பிரதமரின் படம் இடம் பெற்றால் முதல்வரின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற அச்சத்தில் அவரை தவிர்ப்பது மலிவான அரசியலே.

எப்படி, ஒரு மாநிலம் தன் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது, அதே போல் இந்தியா தனது நிர்வாக வசதிக்காக தான் மாநிலங்களை உருவாக்கியது என்பதையும், இந்திய அரசு தன் நிர்வாக வசதிக்காக பல மாநிலங்களை மேலும் உருவாக்க்கி கொள்ளும் அதிகாரம் படைத்தது என்பதையும், கூட்டாட்சி என்பது ஒருவழிப் பாதையல்ல, இரு வழிப்பாதை என்பதையும் திராவிட முன்னேற்ற கழகம் மறந்து விடக்கூடாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 659

    0

    0