ஆசிரியைக்கு மசாஜ் செய்த பள்ளி மாணவர்.. அரசு ஆரம்பப் பள்ளியில் அரங்கேறிய கொடுமை : வைரலான வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2022, 4:52 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் போகரி வட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆரம்ப நிலை பள்ளிக்கூடமான இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் ஆசிரியைக்கு பள்ளி சிறுவன் ஒருவன் கையில் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிலையில் ஆசிரியை மீது விமர்சனங்கள் குவிந்தன.
இதையடுத்து அரசு நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் கல்வித்துறை அதிகாரி சஞ்சீவ் குமார் விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியையின் பெயர் ஊர்னிலா சிங் என தெரியவந்தது.
இதேபோன்று மசாஜ் செய்தது தொடர்பாக இதே ஆசிரியை மீது மேலும் சில புகார்கள் முன்பு வந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் ஊர்னிலா சிங் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீடியோ காட்சியில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிலையில், அவர்களை பணியாளர்களைப் போன்று ஆசிரியை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.