வரவேற்பு நிகழ்ச்‌சியா..! வந்திருக்கும்‌ எழுச்சியா..! ஆனந்தக் கண்ணீர் விட்ட அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
30 July 2022, 9:59 am

பிரதமர் மோடியின் வருகையின் போது உற்சாக வரவேற்பளித்த கட்சி தொண்டர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பாரத பிரதமர்‌ திரு நரேந்திர மோடி அவர்கள்‌ தமிழகத்திற்கு வருகை தரும்‌ போதெல்லாம்‌ தமிழகத்தில்‌ ஒரு திருவிழாக்‌ குதூகலம்‌ கூடிவருகிறது. பாரதப்‌ பிரதமர்‌ அவர்களும்‌, தமிழர்களின்‌ பாரம்பரிய உடையில்‌ வந்து, தமிழ்நாட்டின்‌, தமிழ்‌ மக்களின்‌, தமிழ்‌ மொழியின்‌, தொன்மையையும்‌, பெருமையையும்‌, பெருமிதத்துடன்‌ குறிப்பிடும்‌ போதெல்லாம்‌ தமிழக மக்கள்‌ அவரின்‌ அன்பையும்‌ பாசத்தையும்‌ நினைத்து தங்கள்‌ தலைவராக கொண்டாடுகிறார்கள்‌.

நேற்று சதுரங்க போட்டியைத்‌ தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்த பாரதப்பிரதமர்‌ அவர்களை வரவேற்பதற்காக சாலையின்‌ இருபக்கமும்‌, அன்பின்‌ மிகுதியில்‌ பொதுமக்களும்‌, தமிழகம்‌ முழுவதிலிருந்தும்‌ தாமாக வந்திருந்த, பாரதிய ஜனதா கட்சியின் ஏராளமான தொண்டர்களும்‌, திரளாக நின்று கையசைத்த காட்சி கண்கள்‌ விட்டு மறையவில்லை.

தங்கள்‌ அன்புத்‌ தலைவரைக்‌ காண்பதற்காக, அதிலும்‌, வேகமாக விரையும்‌ பாரத பிரதமரின்‌ வாகன வரிசையில்‌, அவரைக் காணக்கிடைக்கும்‌ நொடி நேர தரிசனத்திற்காக, சாலையின்‌ இருமருங்கிலும்‌, கால்கடுக்க நிற்கும்‌ பொதுமக்களின்‌ பாசத்திற்கும்‌, தன்‌ நாளையும்‌, நேரத்தையும்‌, கைப்பொருளையும்‌ செலவழித்து, நின்று கொண்மருக்கும்‌ கட்சித்‌ தொண்டர்களின்‌ அன்பிற்கும்‌ எல்லையே இல்லை.

அன்பிற்கும்‌ உண்டோ அடைக்கும்‌ தாழ்‌. பரதநாட்டியம்‌, கரகாட்டம்‌, பொய்க்கால்‌ குதிரையாட்டம்‌, தப்பாட்டம்‌, சிலம்பாட்டம்‌, மேளதாளங்கள்‌, என்று பிரதமரின்‌ வாகனம்‌ செல்லும்‌ பாதை எல்லாம்‌ வண்ணக்கோலங்கள்‌‌ ஆக திசையெல்லாம்‌ நடைபெறும் திருவிழாவாக தமிழக மக்கள்‌ தந்த மகத்தான வரவேற்பைக்‌ கண்ட பாரதப்‌ பிரதமர்‌ பெருமகிழ்ச்சி கொண்டார்‌.

தமிழக மக்கள்‌ மீது தனிப்பட்ட அன்பும்‌, மரியாதையும்‌, பாசமும் கொண்டிருக்கும்‌ பிரதமர்‌ அவர்களுக்கு, தமிழக மக்கள்‌ தந்த ஆரவாரமான வரவேற்பு, அவருக்கு மிகுந்த உற்சாகத்தையும்‌, ஆர்வத்தையும்‌ ஏற்படுத்தின. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின்‌ ஓவ்வொரு அணி மற்றும்‌ பிரிவின்‌ தலைவர்கள்‌, மாவட்ட தலைவர்கள்‌, மாநில நிர்வாகிகள்‌ என்று அனைவரும்‌ அவரவர்‌ பணியிலே பாரதப்‌ பிரதமரை அசத்தி விட்டார்கள்‌. எத்தனை திட்டமிடல்‌ இருந்தாலும்‌ மக்கள்‌ ஆதரவு இல்லாமல்‌ இது போன்ற நிகழ்ச்‌சிகளை நடத்த விட முடியாது.

பிரதமருக்கு தரப்பட்ட வரவேற்பினையப்‌ பார்க்கும்போது, ஏதோ கட்சியால்‌ ஏற்பாடு செய்யப்பட்ட, ஒரு நிகழ்ச்சியினை போல இல்லாமல்‌, மக்களிடம்‌ எழுச்‌சியினைக்‌ காண முடிந்தது மிகச்‌ சிறப்பு. அருமையாக திட்டமிட்டு, எந்தவிதமான சங்கடங்களுக்கும்‌ இடம்‌ கொடாமல்‌, காவல்‌ துறையின்‌ முறையான அனுமதியுடன்‌, பண்பாடுகளைப்‌ பிரதிபலிக்கும்‌ பாரம்பரிய கலைகளுடன்‌, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்‌ காட்சிகளுடன்‌, கண்ணியம்‌ மிக்க கலைநயத்துடன்‌ அதே நேரத்தில்‌ கட்டுக்கோப்புடன்‌, பாஜகவின்‌ அருமைத்‌ தொண்டர்கள்‌ நிகழ்த்தி‌ காட்டிய இந்த வரவேற்பு…
கலகலப்பான கல்யாண மகிழ்ச்சி.

வெற்றிகரமாய்‌ இந்த வரவேற்பினை நிகழ்த்திக்‌ காட்டிய அனைவரின்‌ கைகளையும்‌ என்‌ கண்களில்‌ ஒற்றிக்‌ கொள்கிறேன்‌. ஆனந்தக்‌ கண்ணீர்‌ துடைக்க, அனைவருக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றிகளையும்,‌ வாழ்த்துக்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 615

    0

    0