மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கனஅடியாக உயர்வு… ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Author: Babu Lakshmanan4 August 2022, 1:55 pm
கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், காவிரி ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவை மேட்டூர் அணை எட்டையதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் நேற்று மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீருடன் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெய்த மழைநீருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று மதியம் 12 மணி அளவில் இந்த தண்ணீரில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று கொண்டுள்ளது. கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மதியம் 12 மணியளவில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கதவணியில் வரும் மொத்த நீரையும் 93 மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்காதவாறு தடுப்பு வேலி அமைத்தும், முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீர்வரத்து அதிகரித்து கொண்டிருப்பதால் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.