கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் கைது… 2 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan6 August 2022, 11:09 am
திருச்சி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து படுஜோராக நடைபெற்று வருவதாக வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் கடந்த வாரம் புகார் எழுப்பினார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து, துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம், பாலக்கரை மற்றும் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே தனிப்படை காவல்துறையினருக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், பாலக்கரை அருகே வந்த காரை சோதனை செய்த போது, அதில் இரண்டு கிலோ கஞ்சாய் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அதை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பச்சை பெருமாள்பட்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் அருண்குமார் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் திமுகவில் பச்சை பெருமாள் பட்டி கிளை செயலாளர் இருந்து தற்போது இளைஞர் அணியில் பொறுப்பில் உள்ளதும் தனது சொந்த ஊரில் இருந்து துறையூருக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
துறையூர் காவல் நிலைய காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் யாரும் கைது செய்யப்படாத நிலையில், தனிப்படை காவல்துறையினர் 2 கிலோ கஞ்சாவையும், அதனை கடத்தி வந்த நபரையும் அதிரடியாக மடக்கி பிடித்துள்ளனர்.