கோவில்கள் முன்பு பெரியார் சிலைகள்… சர்ச், மசூதி முன்பு வைக்காதது ஏன்..? கனல் கண்ணணுக்கு பெருகும் ஆதரவு..!!
Author: Babu Lakshmanan6 August 2022, 1:05 pm
சென்னை : பெரியார் சிலை குறித்து பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணணுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
அண்மையில் இந்து முன்னணி சார்பில் இந்து உரிமைப் பேரணி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைத்துறை பைட் மாஸ்டர் கனல்கண்ணன், தந்தை பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் கடவுள் இல்லை என்று சொல்பவரின் சிலை இருக்கிறது என்றும், அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாள், என பேசினார்.
அவரின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு அவரை கைது செய்ய தேடி வருகின்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி உள்ளார்.
இதனிடையே, கனல் கண்ணனின் பேச்சுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில், இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கனல் கண்ணனுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது :- தில்லை நடராசரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கியை வாயில் வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே நன்னாள் என்று பேசிய அயோக்கியர்களை கண்டிக்காத கைது செய்யாத காவல்துறை, நடராஜ பெருமான் குறித்து அவதூறாக பேசி இதுவரை கைது செய்யப்படாத யூ2 புரூட்டஸ் மைனர் விஜய் போன்றவர்களுக்கு கருத்துச்சுதந்திரம் இருக்கும்போது, இறை நம்பிக்கையோடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மனம் புண்படும்படியாக கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுள் இல்லை என்று சொல்லக்கூடியவர்களின் கருப்பு தாடி உருவத்தை அகற்ற வேண்டும் என்று கனல்கண்ணன் பேசியது எந்த வகையில் தவறு?
இவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா? மசூதி முன்பாக, சர்ச் முன்பாக ஈவேரா சிலைகளை வைக்காத திராவிட சித்தாந்தவாதிகள் இந்து கோயில்களுக்கு முன்பாக மட்டும் ஈவேரா சிலைகளை நிறுவி கடவுள் மறுப்பு வாசகங்களை நிறுவியதால்தான் சர்ச்சை தொடர்கிறது. கடவுள் மறுப்பு கல்வெட்டு வாசகங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லை எனில் இறைமறுப்பு வாசகங்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் தமிழகத்தில் நடத்திட இந்துசமயம் தயாரானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கனல்கண்ணன் அனல் கிளப்பி விட்டுள்ளார், வாழ்த்துக்கள் கனல் கண்ணன் அவர்களே, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.