‘ரஜினி பேசியது ஒரு வாசகமானாலும் திருவாசகம்’… அவர் சொன்னது சொன்னதுதான்… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் ஆதரவு!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 6:04 pm

மதுரை : மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்றதாக சொல்லும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியது தொடர்பான கேள்விக்கு “ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லி விட்டார், ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக பேசுவார்” என்றார்.

டி.டி.வி தினகரன் ஆங்கில நாளிதழ்க்கு கொடுத்த பேட்டி தொடர்பாக கேட்ட கேள்விக்கு, “டி.டி.வி.தினகரன் அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். டி.டி.வி தினகரன் பேச்சை நாங்கள் பெரிசாக எடுத்து கொள்ள போவதில்லை. சசிகலா பேச்சுக்கு நாங்கள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை.

அதிமுகவினர் கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே நோக்கமாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம். அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக மட்டுமே. மற்றவர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஒரு சிலர் அதிமுகவில் இருந்து செல்வதால் அதிமுகவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை” என்றார்

மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்று உள்ளதாக நிதி அமைச்சர் வைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,”மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். நிதியமைச்சர் பி.டி.ஆர் சொல்லும் குற்றச்சாடை நிரூபிக்க வேண்டும். கமிஷனுக்காக நிதியமைச்சர் பி.டி.ஆர் எங்கள் மீது குற்றச்சாட்டை சொல்கிறாரா என தெரியவில்லை, நிதியமைச்சர் பி.டி.ஆர் கமிஷன் கேட்கிறார் என திமுகவினர் சொல்கிறார்கள்,” என கூறினார்.

  • Makapa Anand skips wedding due to resentment with Priyanka பிரியங்காவுடன் மனக்கசப்பு? அமீர் – பாவனி திருமணத்தில் பிரியங்கா வந்ததால் புறக்கணித்த மாகாபா?!
  • Close menu