அணி மாறிய நிதிஷ்குமார் : பாஜகவுக்கு பாதகமா? சாதகமா?

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 8:11 pm

தேசிய அரசியலில் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கண்டாலே அலர்ஜி கொள்ளும் கட்சிகளை பட்டியலிட்டால் அதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என 21 எதிர்க்கட்சிகள் அடங்கும் என்பது அரசியலில் ஆர்வம் கொண்டோர் அனைவரும் அறிந்த விஷயம்.

மோடியை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம்

அதிலும் குறிப்பாக, பாஜகவை விட நாட்டு மக்கள் மோடி மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் மிக அதிகம் என்பதால் அதைக் கண்டு அத்தனை எதிர்க்கட்சிகளும் மனதுக்குள் அச்சம் கொண்டுள்ளன என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

இந்த வரிசையில் தற்போது திடீரென, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பாஜகவின் ஆதரவால், ஆட்சி நடத்தி வந்த நிதிஷ்குமார் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அடுத்த 24 மணி நேரத்தில் எதிர்க்கட்சியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கை கோர்த்து மீண்டும் முதலமைச்சராகி விட்டார்.

மறைமுக பனிப்போர்

அரசியலில் இது எதிர்பாராத திருப்பம் என்று கூறப்பட்டாலும், 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது முதலே இந்த இரு கட்சிகளுக்கும் இடையே, மறைமுகமாக பனிப்போர் தொடங்கிவிட்டது என்பதே உண்மை.

அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 243. அதில் 115 தொகுதிகள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டன. பாஜக 110 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் போட்டியிட்டன. அதிக இடங்களில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஆனால் அதைவிட 5 தொகுதிகள் குறைவாக போட்டியிட்ட பாஜக 77 தொகுதிகளை கைப்பற்றி விட்டது. கூட்டணிக் கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி மயிரிழை வித்தியாசத்தில் ஆட்சியை
கைப்பற்றிய போதிலும் கூட நிதிஷ்குமாரின் மனதில் வேறொரு சிந்தனை ஓடத் தொடங்கியது.

மோடி மீது நிதிஷ் பொறாமை

அதற்கு காரணம் குறைவான தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு 82 லட்சம் ஓட்டுகள் அந்தத் தேர்தலில் கிடைத்திருந்ததுதான். ஆனால் 115 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சுமார் 65 லட்சம் ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. இதனால் மாநில பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டே தங்களை பல தொகுதிகளில் தோற்கடித்து விட்டனர் என்று நிதிஷ்குமார் நினைக்கத் தொடங்கினார்.

அதை புரிந்துகொண்ட லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரசும் ஓட்டு வித்தியாசமும், வெற்றியும் குறைந்தது தொடர்பாக அவரை உசுப்பேற்றி விட்டன.
எனினும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக உறுதி அளித்தபடி, நிதிஷ்குமாரே அப்போது முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா

என்றபோதிலும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் போக்கு தீவிரமடைந்தது. இதன் வெளிப்பாடாக பிரதமர் மற்றும் மத்திய அரசின் நிகழ்ச்சிகளை, நிதிஷ்குமார் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். சமீபத்தில் பிரதமர் தலைமையில் நடந்த ‘நிதி ஆயோக்’ நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார். மேலும், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இனி சேரப்போவது இல்லை என்றும் ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. இதனால் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிவது ஏறக்குறைய உறுதியானது.

இந்நிலையில்தான் நேற்று மாநில ஆளுநர் பாகு சவுகானை சந்தித்த நிதிஷ்குமார், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அளித்தார். இதனால் பாஜக ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முடிவுக்கு வந்தது.

பாஜகவை விவகாரத்து செய்த நிதிஷ்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் எங்கள் கட்சியின் அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்களும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். இதனால்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்’ என்று அப்போது நிதிஷ்குமார் இதற்கு காரணமும் கூறினார்.

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவருக்கு லாலு பிரசாத்தின் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனடியாக ஆதரவு தெரிவித்தது. இதனால் மீண்டும் ஆட்சி அமைக்க லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உரிமையும் கோரினார். இந்த கூட்டணிக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது நிதிஷ்குமாருக்கு மொத்தம் 164 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

பீகார் மக்கள் கொடுக்கும் தண்டனை

நிதிஷ்குமாரின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் மாநில பாஜக, “2020 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. அவர் இன்னும் திருந்தவே இல்லை. இதற்காக பீகார் மக்கள் நிதிஷ்குமாருக்கு தக்க தண்டனை வழங்குவார்கள்” என்று கூறி இருக்கிறது.

இது எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. நாடே போற்றும் பிரதமர் மோடியின் தலைமை பண்பு, பாஜகவின் அபார வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாமல், நிதிஷ்குமார் இந்த தவறான முடிவை எடுத்திருக்கிறார் டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது ஒண்ணும் புதுசு இல்ல

“நிதிஷ்குமார் இப்படி சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது புதிய விஷயமே அல்ல. 1994ம் ஆண்டு சமதா கட்சியை தொடங்கிய அவர் 1998-ல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 2000ம் ஆண்டு அவர் பீகார் மாநில முதலமைச்சராக ஆனார்.
17 ஆண்டுகள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அவர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் கடுப்படைந்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். 2015 மாநில சட்டப் பேரவை தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மீண்டும் மாநில முதலமைச்சர் ஆனார்.

பிறகு 2017ல் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை கைகழுவிவிட்டு பாஜகவுடன் கைகோர்த்து மறுபடியும் முதலமைச்சரானார். இப்போது மீண்டும் லாலு பிரசாத் பக்கம் தாவி இருக்கிறார். எனவே பாஜகவை 2-வது முறையாக விவாகரத்து செய்துவிட்டு,
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை மீண்டும் ஒரு முறை நிதிஷ்குமார் திருமணம் செய்திருக்கிறார் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

தேஜஸ்வியுடன் மீண்டும் கூட்டணி

2017-ம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்த தேஜஸ்வி யாதவ் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரை பதவி விலகும்படி நிதிஷ்குமார் வலியுறுத்தினார். தேஜஸ்வி மறுக்கவே உங்கள் கூட்டணியே எங்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டுத்தான் அப்போது அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அன்று ஊழலைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட அவர் இப்போது அதே தேஜஸ்வியுடன் மீண்டும் கை கோர்த்து தனது அமைச்சரவையில் துணை முதலமைச்சராக நிதிஷ்குமார் சேர்த்துக் கொண்டிருப்பது, விந்தையிலும் விந்தையாக உள்ளது.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். உலக நாடுகளிடமும் நன்மதிப்பை பெற்று விட்டார். நாமோ இன்னமும், மாநில முதலமைச்சர் ஆகவே இருக்கிறோமே என்ற பொறாமை குணம் நிதிஷ் குமாரிடம் அதிகமாவே, காணப்படுகிறது. அதன் எதிரொலியாகவும் அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பக்கம் தாவி இருக்கிறார், என்பதும் உண்மை.

எதிர்பார்த்தது போலவே, இறுதியாக நிதிஷ்குமார் நாட்டில் மிகவும் ஊழல் நிறைந்த கட்சிகள் என்று கூறப்படும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன்
கைகோர்த்து கொண்டுள்ளார். அவரது இந்த செயலின் மூலம், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற நிதிஷ் குமாரை அவரது மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று உறுதியாக சொல்லலாம்.

பாஜகவுக்கு பீகாரில் நல்ல காலம்

புதிய பங்காளிகள் அவரை நீண்ட காலம் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவரது அரசியல் வாழ்க்கையே கூட சில மாதங்களில் முடிவுக்கு வந்து விடும் வாய்ப்பும் உள்ளது. இந்த கூட்டணி எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதும் கேள்வி குறியான விஷயம்தான். பாஜகவுக்கு இதுவும் நல்லதுதான். ஏனென்றால் அடுத்த முறை மாநிலத்தில் பாஜக தனித்தே ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக பீகாரில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால்தான் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டும் கூட அக்கட்சி அதிக இடங்களில் வெற்றி கண்டுள்ளது. ஓட்டுகளையும் குவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பீகார் மாநிலத்திலும் பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். ஏனென்றால் மோடிக்கு இணையான தலைவர் நிதிஷ்குமார் அல்ல என்பதை அந்த மாநில மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 589

    0

    0