அரசு கலைக்கல்லூரியில் பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை… பேராசிரியருக்கு துணை போகும் நிர்வாகம்? ஒன்று கூடிய பேராசிரியர்களால் பரபரப்பு…!!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2022, 2:34 pm
கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைக்க கல்லூரி முதல்வர் முயல்வதாக குற்றம் சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கல்லூரியில் பேராசிரியை பாலியல் புகார் தெரிவித்த நிலையில் உதவி பேராசிரியர் ரமேஷ் சிவகாசிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு சில வாரங்களிலேயே தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் கோவை அரசு கல்லூரியில் பணியில் இணைந்தார்.
இருப்பினும் ஆசிரியைகள் அவர் மீது கல்லூரி முதல்வரிடமும் முதலமைச்சரின் தனி பிரிவிலும் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணி புறக்கணிப்பு செய்ததுடன் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் வீரமணி தலைமையில் அரசு கலைக் கல்லூரி வாயில் அருகே நின்று பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி பேராசிரியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கல்லூரி முதல்வருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்,
ஒருபுறம் பேராசிரியர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழலில் அதே பகுதியில் பேராசிரியர்களுக்கு எதிராக நின்று உதவி பேராசிரியர் ரமேஷின் மாணவிகள் நான்கு பேர் பேராசிரியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
அப்போது உதவி பேராசிரியர் ரமேஷின் தூண்டுதலாலேயே மாணவிகள் மூன்று பேர் மற்றும் அவரது தாயார் தங்களுக்கு எதிராக முழக்கமிடுவதாக பேரசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே போராட்டம் குறித்து தகவலறிந்த மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் உலகி போராட்டத்தில் ஈடுபட்ட பேரசிரியர்களிடம் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டறிந்தார்.
பின்னர் இது தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான உதவி பேராசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.