மேற்குவங்கத்தில் அடுத்த அதிரடி ; முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் கைது…!!
Author: Babu Lakshmanan11 August 2022, 2:55 pm
மேற்கு வங்கத்தில் கால்நடை கடத்தல் வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பீர்பும் மாவட்டத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அனுபிரதா மொண்டல். இவர், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும் கூட ஆவார்.
இந்நிலையில், பீர்பும் நகரில் உள்ள அனுபிரதா மொண்டலின் இல்லத்திற்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், கால்நடை கடத்தல் வழக்கில் அவரை கைது செய்தது. அதிகாரிகள் நேராக அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 5ம் தேதி கால்நடை கடத்தல் வழக்கில் மொண்டலுக்கு, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அதில், கொல்கத்தா நகரிலுள்ள நிஜாம் பேலஸ் பகுதியில் அமைந்த சி.பி.ஐ. அலுவலகத்தில் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்து இருந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது. அவரிடம் நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் அனுபிரதா மொண்டலின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமன ஊழலில் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளரும், நடிகையுமான ஆர்பிடா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்த அதிரடியாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.