தொடர் விடுமுறை எதிரொலி : பேருந்து நிலையங்களில் முட்டி மோதும் மக்கள் கூட்டம்… போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் தவிப்பு..!!
Author: Babu Lakshmanan12 August 2022, 9:49 pm
கோவை : மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் குவிந்த நிலையில், போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சனி, ஞாயிறு வார விடுமுறை நாள் மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தின விழாவை முன்னிட்டு அராசங்க விடுமுறை என மொத்தமாக 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன. அதனடிப்படையில் கல்லூரிகள் படிக்கும் மாணவர்கள், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் என வெளியூரிலிருந்து வந்து பணியாற்றும் பலரும் மூன்று நாட்கள் விடுமுறைக்கு தாயகம் திரும்ப தயாராகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாத சூழலில் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும் அதிக கட்டணத்தை வசூலித்து வசூல் வேட்டையில் இறங்கியிருக்கின்றன.
ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்துக்கு மாறாக இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்து இருக்கின்றன. குறிப்பாக, சென்னைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட் இன்று 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகின்றன. இதனால் பட்ஜெட்டில் பயணிக்க நினைக்கும் பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகின்றனர்.
அதிக கட்டணம் தந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாதவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தை நாடி இருக்கின்ற நிலையில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதி வருகின்றன. இதனால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகளின் தரப்பில் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பெரு நகரங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுகின்றன.
கோவையிலிருந்து மட்டும் சுமார் நாற்பது சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க அதிரடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த இருப்பதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கோவையிலிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இருக்கின்ற நிலையில், திருச்சி, தேனி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கே பெரும்பாலான சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.