ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழப்பு… வேதனை தாங்காமல் ஆளும் காங்,, எம்எல்ஏ ராஜினாமா…!!
Author: Babu Lakshmanan15 August 2022, 7:07 pm
ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சுரானா கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான். 9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். இதனை பார்த்த ஆசிரியர் அந்த மாணவனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுவன் உயிரிழந்த ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-ஜலோரில் 9 வயது தலித் மாணவன் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அட்டூழியங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறினார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே, தலீத் மக்கள் சித்ரவதைக்குள்ளாவதாகக் கூறி, பதவியை ராஜினாமா செய்திருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.