மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி : சுற்றுச்சுவர் அமைக்க டெண்டர் விடப்படுவதாக விமான நிலைய ஆணையம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 10:30 am

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.35 கோடி டெண்டர் விடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 7 விமானங்கள் நிறுத்தும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும்., புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மட்டுமின்றி அண்டர் பாஸ் முறையில் ரன்வே அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மதுரையை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கும், பெரிய விமானங்கள் வந்து இறங்கி செல்லும் வகையில் தற்போது ஓடுபாதை நீளத்தை 7500 அடியிலிருந்து 12500 அடியாக விரிவாக்கம் செய்ய 610 ஏக்கர்நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கொடுக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.

அதன் அடிப்படையில் 100 ஏக்கர் நிலங்களை தவிர்த்து மீதி நிலங்களை நில உரிமையாளர்களிடமிருந்து தமிழகஅரசு விலை கொடுத்து கைப்பற்றியது. இந்தப் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட நிலங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதை ஒட்டி இந்திய விமான நிலைய ஆணையம் கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க தற்போது ரூ.35 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் முடிவு வரும் 30-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் கொடுத்துள்ள டெண்டரில் இந்த பணியினை முடிக்க 14 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!