‘பேசுவதுதான் வீர வசனம்’… பிரதமரை பார்க்கும் போது இருக்கையின் நுனியில் அமர்ந்த CM ஸ்டாலின்; அண்ணாமலை விமர்சனம்!!
Author: Babu Lakshmanan18 August 2022, 8:08 pm
திருச்சி : இலவசங்களால் வளர்ந்தது திமுக குடும்பம் மட்டுமே தவிர, தமிழகம் அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, பாஜக ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கிடையாது என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் அளித்த அவர், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு ஒரு குறைந்தபட்ச தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது, ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும், மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். இந்த மூன்றுமே இல்லாத திமுக குறைந்தபட்ச சமரசத்தை பற்றி பேசக்கூடாது.
முதலமைச்சருக்கு தெரிந்து விட்டது அதற்கு அருகதை இல்லை என்று இதை ஒத்துக் கொண்டதற்கு முதல்வருக்கு நன்றி. எந்த காலத்திலும் பாஜகவுடன், திமுக கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது, எனக் கூறினார்.
மேலும், இலவசங்கள் பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது குறித்து கேட்டதற்கு, “திமுக ஒரு கட்சி கிடையாது. சினிமாவில் வருவது போல கூத்து பட்டறை போல் உள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு முன்பு இப்படி எந்த முதல்வரும் பேசியது கிடையாது. ஆனால் பிரதமரை சந்திக்கும் போது அவர் உட்கார்ந்து இருந்ததை பார்த்தால் நாற்காலியில் இருந்து கிழே விழுவது போல் உட்கார்ந்திருக்கிறார்.
இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்பதை ஆராய ஒரு குழு அமைக்க வேண்டும். இலவசங்களால் வளர்ந்தது திமுக குடும்பமே தவிர தமிழகம் அல்ல. போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் சுதந்திர தினத்திற்க்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14-ந் தேதி மதுபான கடை சாதனை படைக்கிறது. நீங்கள் (திமுக) அளித்த 508 வாக்குறுதிகளில் 100 வாக்குறுதிகள் இலவசங்களாகவே உள்ளன.
தமிழ்நாடு பொருத்தவரை ஒரு குட்டி இலங்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதே குடும்ப ஆட்சி. “அங்கு 7 பேர் கன்ட்ரோல் செய்தார்கள். இங்கு 5பேர் கன்ட்ரோல் செய்கிறார்கள். அதேபோல பொருளாதார சுமை தமிழ்நாட்டில் இருக்கிறது, எனக் கூறினார்.
விநாயகர் சதுர்த்திக்கு காங்கிரஸ் கட்சியினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைப்பதாக கூறியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “ராகுல் காந்தி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வேஷம் போடுவார், ராம் ரஹீம், லிங்காயத்துக்கு தீட்ச்சை வாங்கியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் ஒரு சிவபக்தன் என்றார். பள்ளிவாசல், சர்ச் ஏன் குல தெய்வ கோவிலுக்கு கூட செல்வார். இதன் வரிசையில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை எடுப்பது என்பது எந்த ஒரு புதிய திட்டமும் கிடையாது,” என கூறினார்.