எதுக்கு இந்த பொழப்பு? மின் இணைப்பு பெற புரோக்கர்… லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி : வைரலான வீடியோவால் சிக்கிய உதவி செயற்பொறியாளர்!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2022, 2:39 pm
பள்ளிகொண்டா மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவர் ராஜா என்பவரை புரோக்கராக வைத்துக்கொண்டு மின் இணைப்பிற்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்த நிலையில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா மின் பகிர்மான கோட்டா அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன்.
இவர், வெட்டுவானம் பகுதியை சேர்ந்த துரை என்கின்ற ராஜா என்பவரை மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் புரோக்கராக வைத்துக் கொண்டு புதிதாக மின் இணைப்பு பெற வரும் நபர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாகவும், ராஜா மூலமாக அப்ளிகேஷன் வந்தால் மட்டுமே மின் இணைப்பு பெறமுடியும் என்ற நிலையை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஏற்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புரோக்கர் ராஜா மூலமாக மின் இணைப்பு அப்ளிகேஷன் வந்தால் மட்டுமே விரைவில் மின் இணைப்பு அப்ரூவலை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் வழங்குவதாகவும் அதற்கு லஞ்சம் பெற்றுகொள்வதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தான், புரோக்கர் ராஜா உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனுக்கு கவர் மூலம் பணம் தரும் வீடியோ வெளியாகி இருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் புரோக்கர் ராஜா காலையில் அலுவலகம் திறக்கும் நேரத்தில் இருந்து மாலை வரை அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2819, முதல் 3400 ரூபாய் என்பது ஒரு இணைப்புக்கு அரசு நிர்ணயித்த தொகை. ஆனால், புரோக்கர் ராஜா எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் புதிய மின் இனைப்பு பெற வரும் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக வாங்கி அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட்டு மீதி பணத்தை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் உட்பட சில அலுவலர்களுக்கு லஞ்சமாக கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ராஜா மூலமாகவே மின் இணைப்பு பெற முடியும் என்ற நிலை, பள்ளிகொண்டா மின் பகிர்மான அலுவலகத்தில் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் புதிய மின் இணைப்பு பெற நேராக அலுவலகத்திற்கு சென்றால் அங்கு பணியாறக்கூடிய சில அலுவலர்களே புரோக்கர் ராஜாவை போய் பாருங்கள், ராஜா மூலமாக வந்தால் மட்டுமே இங்கு விரைவாக இணைப்பு பெற முடியும் என்று அலுவலர்களே அனுப்பி வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதானல் புதிய இணைப்பு பெற்ற வருபவர்கள் புரோக்கர் ராஜாவிடம் செல்ல வேண்டிய அந்த சூழலானது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புரோக்கர்களை ஒழிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.