ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடும் சிறை கைதிகள்… போலீசாரின் சோதனையில் 155 செல்போன்கள் பறிமுதல் ; மரத்தில் ஏறி கைதிகள் போராட்டம்…!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 1:04 pm

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள 156 கைதிகளிடம் இருந்து 155 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மரத்தில் ஏறி கோஷமிட்டதில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 156 கைதிகள் உள்ளனர். போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கள் நாட்டுக்கு செல்லாதவர்கள், தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி பணம் பறிப்பு போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எப்போதும் அறைக்குள் அடைத்து வைக்கப்படுவதில்லை. வீட்டில் இருப்பது போல அந்த வளாகத்திற்குள் இருக்கலாம். இவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் மூலம் இவர்களே சமைத்து சாப்பிடலாம். இவர்களை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், இவர்கள் வெளியில் உள்ள ஓட்டல்களில் இருந்து சொமேட்டோ, ஸ்விக்கி மூலம் வரவழைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளை தவறாக பயன்படுத்தி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையொட்டி, கடந்த மாதம் கேரளாவில் இருந்து வந்த 25 என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்தனர். மறுநாள் அமலாக்கத்துறை சோதனையும் நடந்தது.

என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து, சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கைதிகள் போல நடத்தப்படாமல், அதிக அளவு அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுவதால் அவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, அவற்றை தடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பினர். கைதிகள் போன்கள் பயன்படுத்த சட்டத்தில் இடம் இல்லாத நிலையில், அவர்களுக்கு எப்படி இத்தனை போன்கள் கிடைக்கிறது என்றும், அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த அறிக்கை திருச்சி போலீசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பிறகும் சிறப்பு முகாம் கைதிகள் போன்களை வாங்கி சர்வசாதாரணமாக பயன்படுத்தி வந்துள்ளனர். சிறப்பு முகாமில் இருந்து தொடர்ந்து இலங்கை, டெல்லி, கொச்சி என பல்வேறு இடங்களுக்கு போன் செய்து வருவதை என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து கண்டுபிடித்து மீண்டும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, திருச்சி போலீசார் பதற்றமடைந்தனர்.

இந்த நிலையில், தான் நேற்று அதிகாலை 5 மணிக்கு திருச்சி போலீசார் 3 துணை கமிஷனர்கள் தலைமையில் 300 பேர் அதிரடியாக சிறப்பு முகாமுக்குள் புகுந்து சோதனை போட்டனர். அப்போது, அங்கிருந்த 156 கைதிகளிடம் இருந்து 155 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

துப்பாக்கி போன்ற ஆயுதங்கள், போதைப்பொருட்கள் இருக்கிறதா என துருவி துருவி சோதனை போட்டனர். ஆனால், ஆயுதங்கள் மற்றும் போதைபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதே நேரத்தில் போன்களை தங்களிடம் கொடுக்க வேண்டும் என கைதிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீசார் போன்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர். இனி இங்கு போனுக்கு அனுமதி இல்லை. வெளியில் இருந்து உணவு மற்றும் எந்தவிதமான பார்சல்களும் கொண்டு வரவும் அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

நேற்று போலீசார் நடத்திய சோதனையை கண்டித்து கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மரத்தில் ஏறி கோஷம் போட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கீழே இறக்கினர்.

  • Atlee’s Bollywood Production Updates ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
  • Views: - 870

    0

    0