அரசியல்வாதியா வரல… ஆளுநரா வந்திருக்கேன் ; செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தடாலடி..!!
Author: Babu Lakshmanan20 August 2022, 2:15 pm
தூத்துக்குடிக்கு வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல்வாதியாக வரவில்லை, ஆளுநராகத்தான் வந்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- சுதந்திர அமிர்த பெருவிழா ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் கொண்டாடப்படுகிறது. இது போன்று விழாக்கள் மூலமாகத்தான் வரலாற்றில் இருந்து அறியப்படாமல் உள்ள ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் முழுமையான சரித்திரம் வெளியே வர வாய்ப்புள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட விழாக்கள் தேவை. அதனால் தான் ஒண்டிவீரன் விழாவில் கலந்து கொள்ள இரண்டு ஆளுநர்கள் இங்கு வந்துள்ளோம். இப்படிப்பட்ட வீரர்களினால் தான் நாம் இன்று சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கிறோம். இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும். பாட புத்தகங்களில் இத்தகைய வீரர்களின் வரலாறு இன்னும் அதிகமாக இடம்பெற வேண்டும், எனக் கூறினார்.
அப்போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து தங்களின் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதில் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. நான் ஆளுநராக வந்துள்ளேன். அரசியல்வாதியாக வரவில்லை,” என்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.