காணாமல் போன யானை எங்கே? கண்காணிப்பு கேமராக்களுடன் தேடும் வனத்துறை : சல்லடை போடும் கும்கி யானைகள்!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2022, 8:22 pm
கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஒற்றை காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடந்த நான்கு நாட்களாக தேடியும் கிடைக்காத நிலையில் நேற்றிரவு ஆனைக்கட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட நான்கு இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 15″ஆம் தேதி உடல் நலத் குறைவு காரணமாக கடும் சோர்வுடன் அங்குள்ள ஆற்றின் ஓரமாக நின்றிருந்த ஒற்றை காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
அந்த யானையை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக வனதுறையினர் ஏழு குழுக்கள் அமைத்து கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனைகட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வனப்பகுதிகளுக்கு உள்ளே அடர்ந்த பகுதியில் யானை இருப்பதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் தேடி வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு செங்குட்டை பகுதியில் யானை இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த இரு தினங்களில் யானையின் நடமாட்டம் தெரியாமல் இருந்தது.
இந்த சூழலில் நேற்று மாலை ஊக்கையனூர் பகுதியை அடுத்த வனத்திற்குள் அந்த யானை இருப்பதாக தகவல் வந்தது. பின்னர் இரவில் யானை ஆனைக்கட்டி வடக்கு பகுதிக்கு நகர்ந்துள்ளதை உறுதிப்படுத்திய வனத்துறையினர் அடுத்ததாக அந்த யானை நகர வாய்ப்புள்ள பகுதிகளான செங்குட்டை, வனக்குட்டை, கோழிக்கண்டி மற்றும் ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
அதே வேளையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது யானை சற்று உடல்நலத்துடன் இருப்பதாகவும் அதன் காரணமாகவே வனத்திற்கு வெளியே வராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளேயே சுற்றி வருவதாகவும் தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள் எப்படியிருப்பினும் தண்ணீர் அருந்த அருகிலுள்ள ஆற்றுக்கு வரும் எனவும் அதன் அடிப்படையிலேயே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
மேலும் யானைக்கு விருப்பமான பலாப்பழங்களை வன எல்லைப்பகுதிகளில் சிதர விட்டுள்ள வனத்துறையினர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் நாளைய தினம் எப்படியும் வனத்திற்கு வெளியே வரக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே யானை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஏழு குழுக்களில் நான்கு குழுக்கள் வன எல்லை பகுதிகளிலும் இரண்டு குழுக்கள் வனத்தின் உள் பகுதியிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே யானை கண்டறிப்படும் பட்சத்தில் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்க மருந்துகளையும் உணவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்துள்ள வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகளையும் நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.