தீப்பெட்டி தொழிற்சாலையில் தீக்குச்சி மூட்டைகள் சரிந்து உரசி பயங்கர தீ விபத்து : 2 மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2022, 5:06 pm

சாத்தூர் அருகே தீப்பெட்டி பேக்கேஜிங் கம்பெனியில் தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் பொருட்கள் கருகி சேதமடைந்தன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவரது மனைவி பேபி ராணி (வயது 45) என்பவருக்கு சொந்தமான மாதா தீப்பட்டி பேக்கேஜிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து தீக்குச்சிகளை வாங்கி தீப்பெட்டி பண்டல்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை தீக்குச்சி மூடைகள் அடுக்கி வைத்த அறையில் மூடைகள் சரிந்து விழுந்ததில் தீக்குச்சிகள் உரசி தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தீக்குச்சி மூடைகள் மற்றும் பக்கத்து அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் 2 இயந்திரங்கள் உட்பட அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பெட்டி பேக்கேஜிங் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்