திமுகவுக்கு எதிர்ப்பு… கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு : கரூரில் பாஜகவின் டுவிஸ்ட்..!!
Author: Babu Lakshmanan22 August 2022, 6:12 pm
கரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி உறுப்பினருக்கு ஆதரவாகவும், திமுகவை கண்டித்தும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரை அடுத்த புலியூர் பேரூராட்சியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கலா ராணி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சி தலைமையின் சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து திமுக உறுப்பினர் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து தற்போது வரை திமுக தலைமை சார்பில் தலைவர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி தேர்வு செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக திமுகவை கண்டித்தும், புலியூர் பேரூராட்சியின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ளதாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் – திருச்சி சாலையில் புலியூர் 4 ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்றது.
தாந்தோணி கிழக்கு ஒன்றிய தலைவர் பாலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் புலியூர் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மிக விரைவில் தலைவர் பதவி ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தவறும்பட்சத்திம் மாநில தலைவரின் ஒப்புதல் பெற்று மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.