டம்டம் பாறை அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து : கடவுள் போல வந்த வாகன ஓட்டிகள்… சேலையை வீசி காப்பாற்றிய காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 12:56 pm

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் கர்நாடக பதிவெண் கொண்ட சுற்றுலா பேருந்தில் கொடைக்கானலுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சொந்த ஊர் நோக்கி திரும்பிய போது பேருந்து டம் டம் பாறை அருகே வந்து கொண்டிருந்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சரிவான பாதையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் பேருந்தின் ஹேண்ட் பிரேக்கை மட்டுமே உபயோகித்து பேருந்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனால் பேருந்து சரிவான பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டுட்டுள்ளனர்.

நகர்ந்து சென்ற பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதனால் 40 பயணிகளும் விபத்தில் சிக்கினர்.பேருந்தின் பாதை அமைந்துள்ள பகுதி பள்ளத்திற்குள் சிக்கியதால் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.

அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருக்கும் கம்பி வழியாக ஒரு சேலையைக் கட்டி உள்ளிருந்த 40 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்பாகவே அனைவரும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் 40 சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி