நேற்று அஸ்வினி… இன்று வேலம்மாள்…நாளை யாரோ…? போராடினால்தான் வீடு கிடைக்குமா…? கொதிக்கும் சமூகநல ஆர்வலர்கள்!
Author: Babu Lakshmanan23 August 2022, 5:52 pm
சிரிப்பு பாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கீழகலுங்கடிப்பகுதியை சேர்ந்த 91 வயது வேலம்மாள் பாட்டியை தமிழகத்தில் தெரியாதவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள்.
அதற்கு காரணம் அவருடைய பொக்கை வாய் சிரிப்பு. கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா கால நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இரு தவணைகளாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இரண்டாவது தவணைத் தொகையான 2 ஆயிரம் ரூபாயை, ஜூன் மாதம் பெற்றுக் கொண்டபோது, நான்கு 500 ரூபாய் தாள்களையும், மளிகை பொருட்கள் தொகுப்புடன் இரு கைகளிலும் விரித்துக் காட்டி அவர் முகம் மலர சிரித்த சிரிப்பு புகைப்படமாக நாடு முழுவதும் ஊடகங்களில் வெளியாகி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் ஈர்த்தது.
சிரிப்புதான் சிறப்பு
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது போன்ற ஏழை தாய்மார்களின் சிரிப்புதான் தமது அரசின் சிறப்பு” என்று பெருமிதத்துடன் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு முதியோர் உதவித்தொகை
ஆயிரம் ரூபாய் கிடைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற ஸ்டாலின், வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்துப் பேசினார். அவருடைய உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.
அப்போது வேலம்மாள் பாட்டி முதியோர் உதவித் தொகை கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது அதை வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தனக்கு ஒரு வீடு வழங்க வேண்டும் என்று வேலம்மாள் பாட்டி வைத்த கோரிக்கையையும் முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
வைரல் வீடியோ
இந்த நிலையில்தான் மிக அண்மையில் ஒரு வீடியோவை வேலம்மாள் பாட்டி வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரலானது.
ஆனால் பெரும்பாலான அச்சு, காட்சி ஊடகங்கள் வேலம்மாள் பாட்டியின் இந்த வீடியோ குறித்து செய்தியை வெளியிடவோ, விவாதங்கள் நடத்தவோ அடியோடு மறந்து விட்டன. அதேநேரம் கடந்த ஆண்டு, வேலம்மாள் பாட்டியை ஒரு வாரம் கொண்டாடித் தீர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சரி! வேலம்மாள் பாட்டி தனது வீடியோவில் அப்படி என்னதான் சொல்லியிருந்தார்?…
“முதலமைச்சரை சந்தித்த போது சாப்பிட்டீங்களா, ஆயிரம் ரூபாய் கிடைத்ததா என்று கேட்டார். நானும் கிடைத்தது என்று சொன்னேன். ஐயா எனக்கு வீடு இல்லை, ஒரு வீடு வேணும்னு கேட்டேன். அவரும் தருகிறேன் என்று சொன்னார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தும் இன்னும் வீடு கிடைக்கவில்லை. ஆனால் என்னமோ தெரியல இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது நான் வசித்து வரும் வாடகை வீடு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி இடிக்கப்போவதாக அறிவித்து உள்ளார்கள். இதனால் நான் தங்குவதற்கே இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரே ஒரு அதிகாரி இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தார். விஷயங்களை கேட்டார். வீடு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றார். எனக்கு எங்கேயாவது ஒரு இரண்டு சென்ட் நிலம் வேண்டும், அதில் ஒரு வீடு கட்டி அதில் கிடந்து இறக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் வந்துதான் என்னை அடக்கம் செய்ய வேண்டும்”என்று உருக்கமாக கூறி இருந்தார்.
பொக்கை வாய் சிரிப்பு பாட்டியின் இந்த நெகிழ்ச்சி பதிவு, பல்வேறு சமூக நல ஆர்வலர்களையும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்கள் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
அஸ்வினி
வேலம்மாள் பாட்டியை ஸ்டாலின் நேரில் சந்தித்தபோது, ஒரு வீடு தருகிறேன் என்று கூறிய பிறகும் வாக்குறுதியை மீறுவது திமுக அரசின் மீதான நம்பகத்தன்மையை தமிழக மக்களிடம் இழக்கச் செய்து விடும் என்று திமுகவினரே தங்கள் உதடுகளில் முணுமுணுக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகவும் மாறியது.
ஏனென்றால் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தான், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்த்தில் வசிக்கும் நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த அஸ்வினி என்ற இளம்பெண், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின் என்னிடம் வாக்குறுதி அளித்தும் கூட எனக்கு வீடு கட்டித் தராமல் மாவட்ட அரசு அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். லட்ச ரூபாய் வங்கிக் கடன் உதவி தருவதாக சொன்னார்கள். ஆனால் ஒரு வருடம் ஆகப்போகிறது. இதுவரை எதுவும் நடக்கவில்லை” என்று கொந்தளித்து இருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று தனது வீட்டிற்கு வரவழைத்து உணவு பரிமாறியவர்தான் இந்த அஸ்வினி. அப்பகுதியில் உள்ள ஸ்தல சயன பெருமாள் கோவிலில் நடத்தப்பட்ட அன்னதானத்தில் அஸ்வினியும் அவருடைய உறவினர்கள் 20 பேரும் உணவருந்த முடியாமல் கோவில் நிர்வாகிககளால் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் சமூக ஊடகங்களில் மனம் குமுறி இருந்ததால், அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் அவருடைய வீட்டுக்கு சென்றார்.
அப்போதுதான், அஸ்வினிக்கும், அவருடைய உறவினர்களுக்கும் திமுக அரசு வீடு கட்டித்தரும், கடை நடத்த வங்கிக் கடனும் பெற்றுத் தரும் என்ற வாக்குறுதியை ஸ்டாலின் கொடுத்து இருந்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
நாளை யாரோ?…
அதுபோலவே பொக்கை வாய் சிரிப்பு மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலம் அடைந்த வேலம்மாள் பாட்டியின் நிலையும் ஆகி விடுமோ என்ற கேள்வி எழுந்தது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?… நேற்று அஸ்வினி…இன்று வேலம்மாள் பாட்டி…நாளை யாரோ?… என்று தமிழக மக்கள் கேட்கும் நிலையும் உருவானது.
மிகவும் கஷ்டமான நிலையில் தனது இறுதி நாட்களில் போராடிக் கொண்டிருக்கும் வேலம்மாள் பாட்டிக்கு எவ்வளவு விரைவாக வீடு வழங்க முடியுமோ?
அவ்வளவு விரைவாக திமுக அரசு வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பில் இருந்தும் எழுந்ததால் திமுக அரசுக்கு கடும் நெருக்கடி உருவானது. இந்த நிலையில்தான் வேலம்மாள் பாட்டிக்கு திமுக அரசு வீடு ஒதுக்கி இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாட்டியின் வேதனை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான பரபரப்பு வீடியோ பதிவை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு வீடு ஒதுக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அரசு அதிகாரிகள் வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வீடு ஒதுக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை அவரிடம் வழங்கினர். இந்த வீடு, தற்போது வேலம்மாள் பாட்டி வசிக்கும் இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், திருநெல்வேலி மாவட்ட எல்லையில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய வீடியோவை வேலம்மாள் பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பை புகைப்படமாக எடுத்து பிரபலமாக்கிய போட்டோகிராபர் ஹெர்பியும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு உறுதி செய்து இருக்கிறார்.
“முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த இளம்பெண் ஒருவரும், 90 வயதை கடந்த மூதாட்டி ஒருவரும் அரசு அதிகாரிகளிடம் நீண்ட நெடிய போராட்டம் நடத்தித்தான், தங்களுக்கு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை வேதனையுடன் வெளிப்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளும் சூழல் தமிழகத்தில் உருவாகி இருப்பது மிகவும் கவலைக்குரியது” என்று சமூகநல ஆர்வலர்கள் மனம் குமுறுகின்றனர்.
ஏனென்றால் அஸ்வினி விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசின் சமூகநீதியை நிலை நிறுத்த முயன்றது வெளிப்படையாக தெரிந்த விஷயம். அதேபோல பொக்கை வாய் சிரிப்பு பாட்டி வேலம்மாள் மூலம், இது போன்ற ஏழை தாய்மார்களின் சிரிப்புதான் தமது அரசின் சிறப்பு என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்திருந்தார்.
கடந்த ஓராண்டில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இந்த இரு பெண்களைத் தவிர வேறு யாரையும் நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்ததாக தெரியவில்லை. அதனால் மாவட்ட ஆட்சி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும்தான் இதில் அதிகபட்ச சுறுசுறுப்பை காட்டி இருக்கவேண்டும். அதேநேரம் பொதுவெளியில் தனிப்பட்ட முறையில், தான் சந்தித்தவர்களிடம் அளித்த வாக்குறுதிகள் 3 அல்லது 4 மாதங்களில் நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பு முதலமைச்சருக்கும் உண்டு.
ஏனென்றால், முதலமைச்சர் இவர்களை பொது வெளியில் சந்தித்தபோது, மாநிலம் முழுவதும் பரவலாக பாராட்டு கிடைத்திருக்கும். அதனால் ஏழ்மை மற்றும் வறிய நிலையில் உள்ளவர்கள் மறுபடியும் ஊடகங்கள் மூலம் அதை நினைவூட்டி முதலமைச்சரின் வாக்குறுதி என்னாச்சு? என்று அரசிடம் கேட்பதற்கு முன்பாகவே அதை செய்து முடிப்பதே நல்லது” என்று அந்த சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.