போதையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபர் ; கைகளை கம்பியால் கட்டியும் அடங்க மறுப்பு.. பெற்றோர் மீதும் தாக்குதல்!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 2:19 pm

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற போதை வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திய சில இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டு, அந்த பகுதிவழியாக சென்றவர்களிடம் வம்பிழுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் சென்ற போதை வாலிபர் ஒருவர், புகார் அளிக்க சென்றவரை அங்கிருந்து விரட்டியடித்ததோடு, காவல் நிலையத்தில் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றுள்ளார்.

காவலர்கள் காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியேறிய நிலையில், காவல் நிலையத்திற்குள் சுற்றி வந்த அந்த வாலிபரை, அங்கு திரண்ட சில இளைஞர்கள் கைகளை கட்டி அழைத்து செல்ல முயன்றனர்.

ஆனால், அந்த வாலிபர் அடம் பிடித்தப்படி அங்கேயே நின்று கொண்டிருந்த நிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த அவரது தாய் மற்றும் தந்தை அவரை அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அந்த வாலிபர் தனது தந்தையையும், தாயையும் காலால் மிதித்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அங்கு வந்த சிலர் உதவியுடன் பெற்றோர்கள் அந்த போதை வாலிபரை காவல் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து அழைத்து சென்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மிடாலம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. தாக்குதலில் காயமடைந்த நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், போதை வாலிபர் காவல் நிலையத்திற்குள் வைத்து பெற்றோரை சரமாரியாக தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 924

    0

    0