ஓட்டல் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் : பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞர் வெறிச்செயல்..!!
Author: Babu Lakshmanan29 August 2022, 7:39 pm
சென்னை : சென்னையில் ஓட்டல் முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 26 ம் தேதி சென்னை சாலிகிராமம், கங்கப்பா தெருவிலுள்ள M.R.M. ரெசிடென்சி என்ற ஹோட்டல் முன்புற கதவு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசிச் சென்றதில், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் கதவு மீது பட்டு வெடித்து சிதறி, கண்ணாடி கதவு உடைந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
இது தொடர்பாக மேற்படி ஹோட்டல் உரிமையாளர் தமீம் அன்சாரி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொளுத்தி வீசியது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் (எ) வினோத்குமார் என்ற நபரை கைது செய்தனர்.
விசாரணையில், எதிரி வினோத்குமாருக்கும், ஹோட்டல் நிர்வாகத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக, வினோத்குமார் அவரது கூட்டாளி கலை (எ) கலைச்செல்வன் என்பவருடன் சேர்ந்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் எதிரி வினோத்குமார் மீது T-4 மதுரவாயல் மற்றும் S-15 சேலையூர் காவல் நிலையங்களில் தலா 1 கொலை வழக்கு என 2 கொலை வழக்குகள் உள்பட பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே பல தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி வினோத்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். தலைமறைவாக உள்ள கலை (எ) கலையரசனை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.