மளிகை கடைகள் போதைப் பொருட்கள் ஜரூர் விற்பனை… ரூ.30 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்… உரிமையாளர் எஸ்கேப்..!!
Author: Babu Lakshmanan1 September 2022, 8:53 am
காஞ்சிபுரம் : ஒரகடம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் ஸ்ரீ காமாட்சி மளிகை மற்றும் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகின்றார். இவரது மகன் ராஜா பெங்களூருக்கு சென்று போதை புகையிலை மற்றும் பாக்குகளை வாங்கி வந்து வாகனத்தின் மூலம் கடை கடையாக சென்று விற்பனை செய்து வருவது வழக்கம்.
மிகப் பிரபலமான இந்த மளிகை கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகளை விற்பனை செய்து வருவதை காவல்துறையினர் கண்டும் காணாமலும் இருந்து வந்தனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் பண்ருட்டியில் உள்ள ஸ்ரீ காமாட்சி மளிகை ஸ்டோரில் சென்று கடை மற்றும் வீட்டை சோதனையிட்டனர்.
சோதனை இட்டதில் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை குட்கா போன்ற போதை வஸ்துகள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. ஒரகடம் காவல்துறையினரின் உதவியுடன் கடையில் இருந்த சுமார் 60க்கும் மேற்பட்ட போதை புகையிலை மற்றும் குட்கா வகை மூட்டைகளை போதை தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் கொண்டு சென்றனர் .
இதில் கடையின் உரிமையாளர் தந்தை ஜெகநாதன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். மகன் ராஜா கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.