திமுகவுடன் தொடர்பில்லை என ஓபிஎஸ் நிரூபிக்க முடியுமா..? ஆனா, அதுக்கும் வாய்ப்பில்லை… அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி..!!
Author: Babu Lakshmanan10 September 2022, 6:07 pm
மதுரை ; திமுகவுடன் தொடர்பில்லை என ஓபிஎஸ்ஸால் நிரூபிக்க முடியுமா..? என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சவால் விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதிகளின் 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் எம்.எல்.ஏக்கள் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் பெரியபுள்ளான் ஆகியோர் வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறியதாவது :- சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வினால் திமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர். மகளிர் இலவச பேருந்துகளில் ஏறுவதற்கு பெண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். பயனற்ற பேருந்துகள் மட்டுமே இலவச பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது.
ஓ.பி.எஸ் இனி எந்தவொரு தவறான வழிக்கும் செல்ல மாட்டார் என நினைக்கிறேன். ஓ.பி.எஸ் உடன் இருப்பவர்கள் அவரை தவறான வழிக்கு அழைத்து செல்கிறார்கள். ஓ.பி.எஸ் திமுகவுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால் அதிமுகவில் சேர்க்க நினைக்கலாம். ஆனால், தற்போது அது நடைபெற வாய்ப்பு இல்லை.
சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும், என கூறினார்.