திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணி… மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்ட வாகனங்கள் ; திடீரென கட்டணத்தை உயர்த்திய அரசுப் பேருந்துகள்… வேதனையில் பயணிகள்!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 2:17 pm

திருச்சி காவேரி பாலம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுவதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976ம் ஆண்டு ரூ.102.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. கடந்த சில வருடங்களாக இப்பாலம், மிகவும் பழுதடைந்ததன் காரணமாக சிறிது சிறிதாக சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது பாலத்தின் பல்வேறு இடங்களில் மிகவும் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதன் காரணமாக, இதனை மாவட்ட நிர்வாகம் மூலம் சரி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காவேரி பாலத்தினை சீர்படுத்தும் வகையில் அதற்காக ரூபாய் 6.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த சில மாதங்களாக ஆடிப்பெருக்கு மற்றும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பராமரிப்பு பணி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது காவிரி பாலம் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 10ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பஸ் போக்குவரத்து உள்பட கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையான கும்பகோணத்தான் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் செல்லுமாறும், அதே வழியில் சத்திரம் பேருந்து நிலையம் வரும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.

இதனால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்வதற்காக, தனியார் மற்றும் அரசு பேருந்தில் ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி பயணிகளிடம் இருந்து இன்று முதல் வசூல் செய்கின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல 7 ரூபாய் இருந்த நிலையில் இன்று முதல் 8 ரூபாய் வசூல் செய்கின்றனர். அதேபோல், மத்திய பேருந்து நிலையத்திற்கு பத்து ரூபாய் இருந்த நிலையில் 11 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, அன்பில், முசிறி ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் கூடுதல் கட்டணமானது வசூல் செய்யப்படுகிறது. முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வின் காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதன் உச்சகட்டமாக, காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 617

    0

    0