இந்தியா நிச்சயம் இந்துக்களின் நாடு தான்… திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி…!!
Author: Babu Lakshmanan14 September 2022, 3:53 pm
இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தேமுதிகவின் 18ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி, 500 நபர்களுக்கு இலவச தண்ணீர் குடங்கள் மற்றும் புடவைகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தேமுதிக 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கட்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த நோக்கத்திற்காக கட்சி உருவாக்கப்பட்டதோ, அதை நோக்கி கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தற்போது கூட்டணி குறித்து முடிவு செய்ய சரியான நேரமில்லை. இன்னும் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேமுதிக யாருடன் கூட்டணியில் இருக்கிறது என்பதனை தேமுதிக தான் அறிவிக்கும் கூட்டணி கட்சிகள் அல்ல, எனக் கூறினார்.
அப்போது, இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்திற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “இது இந்துக்கள் நாடு தான். தேமுதிக எந்த ஒரு சாதி, மத பாகுபாடு இன்றி மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி,” என தெரிவித்துள்ளார்.