திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்யுங்க… இந்துக்கள் குறித்து அவதூறு பேச்சு : காவல்நிலையத்தில் பாஜக புகார்!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 10:47 am

இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசா, எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சையான கருத்து சொல்லி வம்பில் சிக்கினார்.

இதே போல நாமக்கல்லில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பாக பேசியிருந்தார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஒரு சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பாஜக கடுமையாக விமர்சித்து இருந்தது.

இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசியிருந்தார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆ.ராசாவின் பேச்சு குறித்து அவரது சொந்தக் கட்சியினரே விளக்கம் கொடுக்காமல் விலகி நிற்கின்றனர்.

இந்தநிலையில் மதுரவாயில் பாஜகவினர் ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர். இது போன்று தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை ஆ.ராசா கூறி வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 495

    0

    0