ரூ.80 கோடி செலவில் கருணாநிதிக்கு மெரினா கடலில் உருவாகிறது பேனா நினைவுச் சின்னம் : மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய தமிழக அரசு..!!
Author: Babu Lakshmanan16 September 2022, 9:52 am
சென்னை : மெரினா கடற்பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி, கடந்த 2018ம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரமாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் விதமாக, அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில், அதாவது மெரினாவின் நடுக்கடலிலும் ரூ.80 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு கண்ணாடியால் ஆன இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 133 அடியாகும். அதாவது 40.5 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் மெரினா கடலில் அமையும் பேனா நினைவு சின்னம் திருவள்ளுவர் சிலையை விட 1 அடி அதிக உயரம் கொண்டதாக 134 அடியில் அதாவது 42 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், விரைவில் பேனா நினைவு சின்னத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது.