பலமுறை புகார் அளித்தும் No Action… இடிந்து விழுந்த காவல்நிலையத்தின் மேற்கூரை : இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?
Author: Babu Lakshmanan17 September 2022, 8:40 pm
சென்னை : அதிகாரிகளின் அலட்சியத்தால் வியாசர்பாடி காவல் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடி P3 காவல் நிலைய வளாகத்தில் குற்றப்பிரிவு , போக்குவரத்து புலனாய்வுத்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆகியவற்றிற்க்கென தனித்தனி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 30 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த இந்த காவல்நிலைய கட்டிடத்தின் பல இடங்களில் ஏற்கனவே விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விடும் நிலையில் இருந்துள்ளது.

காவல் நிலையத்தை புதுப்பிக்கக் கோரி ஏற்கனவே பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக காவலர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காலாவதியான அரசு கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என ஏற்கனவே விதிமுறைகள் நடைமுறையில் இருந்த போதும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது வியாசர்பாடி காவல் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
இனியாவது காவல் நிலையத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.