கூட்டமாக வந்த யானைகளிடம் சிக்கிய விவசாயி.. ஓட ஓட துரத்தியதில் படுகாயம் : பயிர்களை காக்க பாதுகாப்புக்கு இருந்த போது பரிதாபம்!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2022, 10:47 am
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே கணேசபுரம் பகுதியை சேர்ந்து விவசாயி ராமலிங்கம். கணேசபுரம் பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
எனவே தன்னுடைய விளைநிலத்தில் இருக்கும் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்காக வழக்கம்போல் அவர் நேற்று இரவு வயலில் காவலுக்கு இருந்தார்.
அப்போது அங்கு வந்த யானை கூட்டத்தில் ஒரு யானை விவசாயி ராமலிங்கத்தை துரத்தி சென்றது. உயிருக்கு பயந்து ஓடிய விவசாயி ராமலிங்கம் கால் இடறி விழுந்த நிலையில் அவரை அந்த யானை மிதித்ததாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த ராமலிங்கம் இது பற்றி உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் அளித்தார். விரைந்து சென்ற உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.