தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல் ; வைரலான வீடியோ… திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது வழக்குப்பதிவு!!
Author: Babu Lakshmanan22 September 2022, 11:41 am
தனியார் தொழிற்சாலை நிறுவன ஊழியர்களை மிரட்டியது தொடர்பாக தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே செயல்பட்டு வரும் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்களை தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
அந்த வீடியோவில், கை, கால்களை உடைத்து விடுவேன் என்றும், மாலைக்குள் கம்பெனியை மூடி விடுவேன் என்று திமுக எம்எல்ஏ மிரட்டல் விடுப்பது அந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தங்கள் நிறுவனத்திற்கும், தங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக எதிர்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினரே ஒரு நிறுவன ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரிலும், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை அடிப்படையாகக் கொண்டும், திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்து கொண்டதால், விரைவில் அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் எடுப்பார் என்று தெரிகிறது.