சாலையில் டேபிள் போட்டு மது அருந்தும் மதுபிரியர்கள் ; முகம் சுழிக்கும் பொதுமக்கள்… பார் உரிமையாளர் மீது நடவடிக்கை பாயுமா..?
Author: Babu Lakshmanan22 September 2022, 1:12 pm
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையின் சாலையில் டேபிள்களை வைத்து சட்டவிரோதமாக மது குடிப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில், பேருந்து நிலையம் பின்புறம் 1655 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடைக்கு முன்பு குடிமகன்கள் சாலையில் தைரியமாக டேபிள் அமைத்து மது குடித்து வருகின்றனர். இது பார் உரிமையாளரின் அனுமதியோடு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது.
இப்படி சாலையிலேயே டேபிள் அமைத்து மது குடிக்கும் மது பிரியர்கள் அவ்வழியே பயணிக்கும் பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றனர். அதேபோல சாலையில் பெண்கள் நடக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் மது பிரியர்கள் போதையில் வெட்ட வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இது அவ்வழியே பயணிப்பவர்களின் முகங்களை சுளிக்க செய்கிறது.
பரபரப்பான சிங்காநல்லூர் காவல் நிலையம் எதிர்புறம் இருக்கும் இந்த மது கடையில், மாலை நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதற்கு காரணமான, பார் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.