செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் செல்போன் பறிப்பு : கைது செய்வதாக மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர்!!
Author: Udayachandran RadhaKrishnan22 September 2022, 9:15 pm
விளாத்திகுளம் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து, கைது செய்வேன் என காவல் உதவி ஆய்வாளர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இடப்பிரச்சனை சம்பந்தமாக இன்று சூரங்குடி காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் செல்போன்களை பறித்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் ஒருமையில், பேசி “வெளியே போ… இல்லன்னா கைது செய்து உள்ளே வைத்து விடுவேன்…” என்று செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்துள்ளார்.
இதனால், செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து செல்போன்களை பறித்துக்கொண்டு மிரட்டிய சூரங்குடி காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.